Header Ads

நான் இருக்கும் இடத்தில்

  


நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இருக்கும் இடத்தில் நாமும் இருக்க வேண்டும் என்பதே அவரின் விருப்பம் (யோவான் 17:24). அதற்காகவே அவர் தம்முடைய மகிமையை துறந்து, இந்த பூமிக்கு மனிதனாக வந்தார்.

            அவர் இந்த பூமிக்கு வந்த நோக்கத்தை அறியாது, ஜனங்கள் அவரை புறக்கணித்தனர். ஆனால், அவரை அறிந்து கொண்டவர்களுக்கு அவர் இருக்கும் இடத்தில் தாங்களும் இருக்கப் போகிறோம் என்பது எத்தனை பெரிய ஆசீர்வாதம்.

இந்த சிந்தனையை யோவான் தனது சுவிசேஷத்தில் ஐந்து இடங்களில் பயன்படுத்துகிறார்.

1. அவிசுவாசிகளின் அறியாமை. யோவான் 7:36

“நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைக் காணமாட்டீர்கள் என்றும், நான் இருக்கும் இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்றும், இவர் சொன்ன வார்த்தையின் கருத்து என்னவென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.”

அவிசுவாசிகளில் அநேகர் மரணத்திற்குப் பின்பு ஒரு வாழ்வு உண்டு என்பதை அறியாதவர்களாக இருக்கிறார்கள். இது அவர்களின் அறியாமையே.

2. அவிசுவாசிகளின் ஆக்கினை. யோவான் 7:34

“நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைக் காணமாட்டீர்கள்; நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரவுங்கூடாது என்றார்.”

தேவ குமாரனை விசுவாசியாததின் விளைவை மனிதன் அனுபவிக்க வேண்டும். இது அவர்களுக்கான ஆக்கினை.

3. விசுவாசிகளின் ஆனந்தம் (சிலாக்கியம்). யோவான் 17:24

“பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்.”

பாவிகளான நமக்கு பரிசுத்தரோடு உடன் இருக்கும் பரலோக பாக்கியம் என்பது எத்தனை ஆனந்தம்.

4. விசுவாசிகளின் ஆறுதல். யோவான் 7:34

“நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.”

அவர் இருக்குமிடத்தில் நம்மை சேர்த்துக்கொள்ள வருகிறார் என்பது, பல சூழ்நிலைகளில் நடுவே கடந்து செல்லும் நமக்கு ஆறுதலான வார்த்தை.

5. விசுவாசிகளின் ஆசீர்வாதம் (பிரதிபலன்). யோவான் 7:34

“ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.”

இந்த பூமியில் அவருக்காய் வாழ்ந்ததின் பிரதிபலன்களை பரலோகத்தில் அவரோடுகூட இருக்கும் போது அனுபவிக்க போகிறோம் என்பது விசுவாசிகள் பெறப்போகிற மாபெரும் ஆசீர்வாதம்.

“உம்மோடு இருப்பதுதான் உள்ளத்தின் வாஞ்சை ஐயா”

கே. விவேகானந்த் (Vivekk7)

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.